Thursday, September 29, 2011

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிப் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டனில் உள்ள தமிழர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம் உள்ளதால் பிரித்தானிய அரசாங்கம் இத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய மருத்துவ அறக்கட்டளையகம் இன்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட 50 பேரை வாடகை விமானம் மூலம் பிரித்தானிய எல்லை முகவரகம் பலவந்தமாக திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டமைக்கு மருத்துவ சான்றுகள் உள்ளன என அறக்கட்டளையகம் குறிப்பிட்டது.
இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மோசமாக நடத்தப்படும் ஆபத்து உள்ளது என பல தொண்டர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கைக்கு மீண்ட போது சித்தரவதைக்கு உட்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது.
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் 27 தமிழர்,11 சிங்களவர் 12 முஸ்லிம்கள் உள்ளனர்
மனித உரிமை அமைப்புகளின்; எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று இலங்கை குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் பிரித்தானிய நீதிமன்ற உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
எனினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 50 இலங்கையர்களும்; இன்று முற்பகல் கட்டுநாயக்க வானூர்தி தளத்திற்கு அழைத்து வரப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பாதுகாப்புக்காக 100 பிரித்தானிய அதிகாரிகள் வந்திருந்தனர்.
அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்ட இவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்களில் 27 தமிழர்களும் 11 சிங்களவர்களும் 12 முஸ்லி;ம்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்கள் திருகோணமலை, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம்; 17 ஆம் திகதியும் பிரித்தானியாவில் இருந்து 44 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று வந்தவர்களிடம் இலங்கையின் குற்றப்புலனாய்வு பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.

0 comments:

Post a Comment