Tuesday, July 17, 2012

ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன்



நோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது.
இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு ரூட்டர் கருவி தேவைப்படுகிறது.
ஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை பயன்படுத்தலாம்.
நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறது.
சமீபமாக நோக்கியா நிறுவனம் பல சரிவுகளை சந்தித்து வந்தாலும் கூட, ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்க முயற்சித்து கொண்டு வருகிறது என்பதற்கு நோக்கியா வழங்கும் இந்த அப்டேஷன் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.

டைப்(Type) செய்ய கற்றுக் கொடுக்கும் இணையத்தளம்!




டைப்(Type) செய்ய கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு லெட்டர் பபில்(Letter Bubbles) என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.
இந்த தளம் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது. அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் எளிமையான கணணி விளையாட்டு பக்கம் போலவே தோன்றுகிறது.
இந்த தளத்தில் நுழைந்ததுமே டைப் செய்யும் விளையாட்டுக்கான வழிமுறையும் விளையாட்டு நிலைகளும் தோன்றுகின்றன.
அவற்றில் விரும்பியதை தெரிவு செய்தால் திரையில் கண்ணாடி குமிழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். குமிழ்களில் தோன்றும் ஆங்கில எழுத்துக்களை பார்த்து அவற்றுக்கான விசையை அழுத்த வேண்டும். கண்ணாடி குமிழ்கள் தோன்ற தோன்ற அவற்றுக்கான விசையை தேடி அழுத்த வேண்டும்.
சரியான விசையை அழுத்துவதற்கு ஏற்ப ஒவ்வொரு நிலையாக முன்னேறி கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் எழுத்துக்களின் சவால் கூடிக்கொண்டே போவது சுவாரஸ்யம்.
இவ்வாறு மூன்று கட்டங்களின் விளையாட்டுக்கள் அதாவது பயிற்சி இருக்கின்றன. திறமைக்கேற்ப ஏதாவது ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம்.
விளையாட்டாக இருப்பதால் எவருக்குமே முயன்று பார்க்கலாமே என்று தோன்றும். குமிழ்களை பார்க்கும் போது ஒருவித சவாலாகவே தோன்றும். இந்த இரண்டும் இணைந்து விளையாட்டில் மூழ்க வைக்கும். அப்படியே டைப் செய்வதில் வேகத்தையும் விவேகத்தையும்(பிழையின்றி டைப் செய்வது) ஏற்படுத்தி தரும்.
உறுப்பினராகும்(Member) வசதியும் இருக்கிறது. உறுப்பினராகாமலேயே டைப் செய்யும் வசதியும் இருக்கிறது. ஆனால் உறுப்பினரானால் பல சிறப்பம்சங்களை அனுபவிக்கலாம்.
அதாவது டைப் செய்வதில் ஒருவரது முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளலாம். நண்பர்களை அழைத்து அவர்களோடு போட்டி போடலாம்.

இணையதள முகவரி 

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ள ஜெயவர்த்தன!


இந்தியாவின் நடைபெற்ற இந்தியன் பிறீமியர் லீக்கை போன்று இலங்கையில் முதன் முறையாக ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த எஸ்.எல்.பி.எல் போட்டிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன புதிய கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, இலங்கை வீரர்களுடனான வருடாந்திர ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட்டால் மட்டுமே, ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் 2012ம் ஆண்டுக்கான வீரர்களுடன் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. அவ்வீரர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்கான சம்பளம் வழங்கப்படவுமல்லை.
கடனில் மூழ்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக மூன்று அரங்குகளை கட்டியதிலிருந்து பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த அரங்குகளுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.எல்.பிஎல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31ம் திகதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 42 பேர் மட்டக்களப்பில் கைது!



மட்டக்களப்பு கடற்பகுதியில் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 42 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரை உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை: கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை!




தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழ் அகதி முகாமைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் மேட்டுப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப்படுத்தப்பட்டிருப்பதுடன் உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டில்லியை அதிரவைத்திருக்கும் சனல் 4 தொலைக்காட்சி !


இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய  ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4  தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது தெரியுமா ? அதுதான் புதுடில்லியின் தலையில்!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது.
சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், ‘Kashmir’s torture trail’.
காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தால்  நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் அடங்கியுள்ளன.
பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், மத்திய அரசை தாக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது பிரிட்டிஷ் பத்திரிகை ‘கார்டியன்’...
கடந்த வருட நடுப்பகுதியில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய ‘Sri Lanka’s Killing Fields’ ஆவணப்படம் வெளியானபோது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்ற வாதத்தை பிரிட்டிஷ் எம்.பி.க்கள் சிலர் முன்வைத்தார்கள்.
இப்போது, சனல்-4 தமது புதிய வெடிகுண்டை இந்திய மண்ணில் போட்டிருப்பதை தொடர்ந்து பிரிட்டனுடன் கடினமான இராஜதந்திர தொடர்பு ஒன்றை செய்ய வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.-வின் அடுத்த மனித உரிமை மாநாட்டில் இந்த விவகாரத்தை இலங்கை பெரிதுபடுத்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.