Sunday, April 1, 2012

உலகின் மிக நீளமான தொங்கு பாலம்...

உலகின் மிகவும் நீளமான தொங்கு பாலம் சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரு சுரங்கப் பாதைகளை இணைக்கும் வகையில் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு மேலாக 1102 அடி உயரத்தில் இந்த 4000 அடி நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 



இந்தப் பாலம் உலகின் மிகவும் உயரமான சுரங்கப் பாதைகளை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது.


இந்தப் பாலத்தை அமைக்கும் பணி 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொறியியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.


ஹுனான் மாகாணத்தில் ஜிஷோயு பிராந்தியத்திலான வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


78அடி அகலத்தைக்கொண்ட இந்தப் பாலத்தில் இரவு வேளையில் 1888 மின் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன.


  
   

பதுளையில் பொலிஸார் - பயணிகள் கைகலப்பு _

 பதுளை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் பொலிஸாருக்கும் பயணிகளுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு பொலிஸார் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடி வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சன நெருக்கடி தொடர்பில் ஏற்பட்ட போக்குவரத்துப் பிரச்சினை ஒன்று பற்றி விசாரிக்கச் சென்ற பொலிஸாருக்கும் பயணிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியதாக அங்கு நின்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். ___

டெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.


இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் ஆசிய கிரிக்கெட்டில் தனது 100-வது சர்வதேச சதத்தை (டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 49 சதம்) எடுத்து உலக சாதனை படைத்தார். செஞ்சுரியில் செஞ்சுரி கண்ட முதல் வீரர் இவர் தான்.


டெண்டுல்கரின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்று அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவருமான ஹெடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மொகாலியில் அளித்த பேட்டி வருமாறு:-


சதங்களில் டெண்டுல்கருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அவர் தலைச்சிறந்த வீரர் என்பதை பறைசாற்றும். அவர் தொடர்ந்து தனது வழியில் அசத்திக் கொண்டிருக்கிறார். அவரது உலக சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா? என்பது உண்மையிலேயே சந்தேகம் தான். அவரது சாதனையை பார்த்தால், அவருக்கு அடுத்து உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ரிக்கிபொண்டிங் தான். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக இதுவரை 71 சதங்களே (டெஸ்டில் 41 சதம், ஒரு நாள் போட்டியில் 30 சதம்) எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே 29 சதங்கள் இடைவெளி உள்ளது. 


ஜிம்பாப்வே, பங்காளதேஷ் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக டெண்டுல்கர் நிறைய போட்டிகளில் விளையாடி சதம் அடித்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். இந்த வகையில் வேண்டுமானால் 10 சதங்களை குறைக்கலாம். அப்படி பார்த்தாலும் அவருக்கும், பொண்டிங்குக்கும் இடையே 19 சதங்கள் வித்தியாசம் உள்ளது. டெண்டுல்கரின் சாதனை ஈடு இணையற்றது, வியக்கத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளாக ஒரே மாதிரியான தீவிர முனைப்புடனும், உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். இதுவே அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டும்.


ராகுல் டிராவிட் ஓய்வு பெற்று விட்டார். தற்போது சிரேஷ்ட வீரர்கள் என்ற வகையில் வி.வி.எஸ்.லட்சுமணும், டெண்டுல்கர் மட்டும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதில் டெண்டுல்கர் ஓய்வு பெறும் போது அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழும். நாங்களும் இதே போன்ற நிலைமையை சந்தித்தோம். எனவே அது போன்ற சமயத்தில் இந்திய ரசிகர்கள் சற்று பொறுமையாகத் தான் இருந்தாக வேண்டும்.


இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. விராட் கோக்லி போன்ற இளம் வீரர்கள் அணிக்கு வரும் போது வந்த உடனே அவர் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம்.
தற்போதைய தருணத்தில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோக்லி விளங்குகிறார். இந்திய டெஸ்ட் அணியில் டிராவிட்டின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர் இப்போது வளர்ந்து வரும் ஒரு வீரர். அவர் எதற்கு முன்னுரிமை கொடுத்து ஆடுகிறார் என்பது எனக்கு தெரியாது. எனவே அவரை பற்றி ஒரு கருத்தை உருவாக்க விரும்பவில்லை. புதிய பந்துகளை அவர் ரொம்ப நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார் என்பதை அவரது ஆட்டம் மூலம் பார்க்க முடிகிறது. நிச்சயம் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்றார். 


அமெ.டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி...

அமெரிக்க டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க கடந்த வாரம் இலங்கை அரசு முயற்சிகளை எடுத்திருந்த போதும் அது பெரிதும் வெற்றி பெறவில்லை.


கடந்த மாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபாவாக குறைந்தது. கடந்த 19 ஆம் திகதி அமெ.டொலர் ஒன்றுக்கு எதிராக 131.60 ரூபா என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 125 ரூபாவாக நிலைநிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து கடந்த வாரத் தொடக்கத்தில் தளம்பலான நிலையே காணப்பட்டது.


டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி கடந்த வியாழன் 127.60 ரூபாவாக உயர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை வர்த்தக முடிவின் போது இலங்கை நாணயப் பெறுமதி மேலும் சரிந்து டொலருக்கான மதிப்பு 128.30 ரூபா என்ற நிலையை அடைந்தது. இதனால் ரூபாவின் மதிப்பைக் குறைக்கும் இலங்கை அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிகிறது


மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை ஆரம்பம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

நிதிநெருக்கடி காரணமாக ரத்துச்செய்யப்பட்டிருந்த இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்காகச் சிறிய ரக கப்பல்கள் இயக்கப்படும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையா இன்று தமிழ்நாடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

லிபியாவைப் போன்று தலைவரைப் பலியாக்க மக்கள் இடமளிக்க மாட்டார்கள் : ஜனாதிபதி _

லிபியத் தலைவர் கடாபியை பாதையில் இழுத்துச் சென்றதைப் போன்று தம் தலைவரைப் பலியாக்க எமது நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 
நேற்று மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற 'ஒன்றிணைந்த நாடு' என்ற தலைப்பிலான கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"லிபியத் தலைவர் கடாபியைப் போன்று பாதையில் இழுத்து சென்று நாட்டுத் தலைவரைப் பலியாக்க இந்நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் ஏகாகிபத்தியவாதிகளான ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே எமது நாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர். 

அவர்கள் இவ்வாறு பல முறை முயற்சி செய்த போதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எம் மத்தியில் ஒற்றுமை இருக்கும் வரைக்கும் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.

இருப்பினும் உள்நாட்டுப் பிரதானிகள் சிலர் அன்றைய மன்னருக்கு எதிராகச் சதி செய்து ஆங்கிலேயரிடம் நாட்டைக் காட்டிக் கொடுத்ததன் விளைவாகவே ஆங்கிலேயரால் எம்மை ஆக்கிரமிக்க முடிந்தது.

ஏகாதிபத்தியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகவே இன்று இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.

ஒரு சில அரசசார்பற்ற நிறுவனம் என்று கூறிக் கொள்ளும் அமைப்புகளும் கனவு காணும் சில அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு எதிராகச் செயற்படுகின்றன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முன், கட்சியின் அதிகாரத்தைக் காப்பாறிக் கொள்ளுங்கள் என்பதைத்தான். அதற்கு பின் நாட்டைப் பற்றி சிந்திக்கலாம். இவர்களது பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது நாட்டின் பாதுகாப்புக் கருதி அனைவரும் ஒன்று சேர வேண்டும்" என்றார். 

ஜெனீவா தீர்மானத்தால் நாட்டில் எதுவுமே நடந்துவிடாது. ஜெனீவா தீர்மானம் வேறு, பொருளாதாரத் தடை வேறு. நல்லிணக்க ஆணைக்குழு எமது ஜனாதிபதி நியமித்த ஒன்று. இது சர்வசே குழு அல்ல. அக்குழவின் தீர்மானத்தை அமுல்படுத்த கோரியே சர்வதேசம் வேண்டுகிறது. அதனை அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அலுத்கமகே, டியூ குணசேகர, தினேஷ் குணவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண அமைச்சர் அனுஷியா சிவராசா உட்படப் பலர் உரையாற்றினர்.