Sunday, April 1, 2012

டெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.


இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் ஆசிய கிரிக்கெட்டில் தனது 100-வது சர்வதேச சதத்தை (டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 49 சதம்) எடுத்து உலக சாதனை படைத்தார். செஞ்சுரியில் செஞ்சுரி கண்ட முதல் வீரர் இவர் தான்.


டெண்டுல்கரின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்று அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவருமான ஹெடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மொகாலியில் அளித்த பேட்டி வருமாறு:-


சதங்களில் டெண்டுல்கருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே அவர் தலைச்சிறந்த வீரர் என்பதை பறைசாற்றும். அவர் தொடர்ந்து தனது வழியில் அசத்திக் கொண்டிருக்கிறார். அவரது உலக சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா? என்பது உண்மையிலேயே சந்தேகம் தான். அவரது சாதனையை பார்த்தால், அவருக்கு அடுத்து உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ரிக்கிபொண்டிங் தான். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக இதுவரை 71 சதங்களே (டெஸ்டில் 41 சதம், ஒரு நாள் போட்டியில் 30 சதம்) எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே 29 சதங்கள் இடைவெளி உள்ளது. 


ஜிம்பாப்வே, பங்காளதேஷ் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக டெண்டுல்கர் நிறைய போட்டிகளில் விளையாடி சதம் அடித்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். இந்த வகையில் வேண்டுமானால் 10 சதங்களை குறைக்கலாம். அப்படி பார்த்தாலும் அவருக்கும், பொண்டிங்குக்கும் இடையே 19 சதங்கள் வித்தியாசம் உள்ளது. டெண்டுல்கரின் சாதனை ஈடு இணையற்றது, வியக்கத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளாக ஒரே மாதிரியான தீவிர முனைப்புடனும், உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். இதுவே அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டும்.


ராகுல் டிராவிட் ஓய்வு பெற்று விட்டார். தற்போது சிரேஷ்ட வீரர்கள் என்ற வகையில் வி.வி.எஸ்.லட்சுமணும், டெண்டுல்கர் மட்டும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதில் டெண்டுல்கர் ஓய்வு பெறும் போது அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழும். நாங்களும் இதே போன்ற நிலைமையை சந்தித்தோம். எனவே அது போன்ற சமயத்தில் இந்திய ரசிகர்கள் சற்று பொறுமையாகத் தான் இருந்தாக வேண்டும்.


இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. விராட் கோக்லி போன்ற இளம் வீரர்கள் அணிக்கு வரும் போது வந்த உடனே அவர் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம்.
தற்போதைய தருணத்தில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோக்லி விளங்குகிறார். இந்திய டெஸ்ட் அணியில் டிராவிட்டின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர் இப்போது வளர்ந்து வரும் ஒரு வீரர். அவர் எதற்கு முன்னுரிமை கொடுத்து ஆடுகிறார் என்பது எனக்கு தெரியாது. எனவே அவரை பற்றி ஒரு கருத்தை உருவாக்க விரும்பவில்லை. புதிய பந்துகளை அவர் ரொம்ப நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார் என்பதை அவரது ஆட்டம் மூலம் பார்க்க முடிகிறது. நிச்சயம் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்றார். 


0 comments:

Post a Comment