தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடியில் நடைபெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது,
நேற்றைய நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற புலிக்கொடி விவகாரம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அத்துடன் அந்த செய்தியாளர், ஐக்கிய தேசிய கட்சியினரால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் புலிக்கொடி ஏந்தியவாறு மர்ம நபர்கள் நடமாடியதை ஞாபகப்படுத்தினார்.
அந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று, நேற்று நடைபெற்ற புலிக்கொடி ஏந்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் அரசாங்கம் பாராமுகம் காண்பிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சற்றும் தாமதிக்காத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 'விசாரணை நடத்தப்படும் என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு வேறு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment