Saturday, October 1, 2011

5 வயது பெண் குழந்தைக்கு இதயத்தில் 4 முறை ஆபரேஷன்

வங்காள தேசத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தைக்கு, இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்ட ரத்தக் கசிவை நிறுத்த 4வது முறையாக ஆபரேஷன் செய்து, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சரி செய்தனர்.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது பிலால். இவரது 5 வயது மகள் புஷ்பதன்ஷியா பிலால், பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். இதையடுத்து, அவருக்கு 3 வயதில் அந்த நாட்டிலேயே இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைப்பதற்கான ஆபரேஷன் செய்தனர். ஒன்றரை ஆண்டு குழந்தை நலமாக இருந்தது. பின்னர், ஆபரேஷன் செய்த பகுதியில் மீண்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் நுரையீர லும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டாள். ஒரு தனியார் மருத்துவமனையில் இருதயத்துக்கு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவை சரி செய்ய 3 ஸ்டென்ட் (கம்பி போன்ற வலை)பொருத்தப்பட்டது. அதன்பிறகும் ரத்தக்கசிவு நிற்காதததால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
மியாட் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.வி.பாஷி தலைமையிலான டாக்டர்கள் குழு, கடந்த 15ம் தேதி ரத்தக் கசிவை நிறுத்த மீண்டும் இரண்டு ஸ்டென்ட்களை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். ஆனாலும், கசிவு நிற்கவில்லை. பின்னர், 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் மார்பு பகுதியை திறந்து, இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (அயோட்டா) அடைப்பை சரி செய்தனர்.
ஆபரேஷன் குறித்து டாக்டர் வி.வி.பாஷி கூறியதாவது: இதய நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தைக்கு ஏற்கனவே இரண்டு ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் சரியாகாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். நாங்கள் 3வது முறையாக ரத்தக் குழாய் பாதிப்பை சரி செய்யும் ஸ்டென்ட் பொருத்தும் அறுவை சிகிச்சையை முதலில் செய்தோம். பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஸ்டென்டை குழந்தைக்கும் பொருத்தியதால் ரத்தக் கசிவை நிறுத்த முடியவில்லை. எனவே, 4வதாக வேறு எந்த மாற்று வழிகளும் இல்லாத நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.
இதயம் மற்றும் நுரை யீரல் பகுதியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி, 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு ரத்தம் குளிரூட்டப்பட்டது. அதன்பிறகு ஏற்கனவே குழந்தையின் ரத்தக் குழாயில் வைக்கப்பட்டிருந்த 5 ஸ்டென்ட்களை அகற்றி விட்டு, புதிதாக வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்த ‘சின்தடிக் கிராப்ட்’ என்ற ரப்பர் குழாய் போன்ற டியூப் வைத்து தைக்கப்பட்டு ரத்தக் கசிவு சரி செய்யப்பட்டது.
எங்களுக்கு தெரிந்தவரை இவ்வளவு சிறிய வயதில், ஒரு குழந்தைக்கு 4 ஆபரேஷன் இதய பகுதியில் நடைபெற்றதும், 5 ஸ்டென்ட் பொருத்தப்பட்டு மீண்டும் அது அகற்றப்பட்டு, ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து சரி செய்ததும், உலகத்தில் இதுதான் முதன்முறையாகும். இவ்வாறு டாக்டர் பாஷி கூறினார்.

0 comments:

Post a Comment