Sunday, October 2, 2011

ராட்சத ராட்டினத்தில் மோதி, அங்கேயே தொங்கிய விமானம்!

சிறிய விமானம் ஒன்று, சிறுவர்களுக்கான பிரமாண்ட ராட்டினம் ஒன்றில் போய் மோதி, அதிலேயே சிக்கிக் கொண்ட விபத்து ஒன்று,
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றிருக்கிறது. ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும், விமானத்தில் பறந்த இருவரும், ராட்டினத்தில் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கிக் கொண்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.
சூப்பர்லைட் சீட்டா எஸ்-200 ரக விமானமே விபத்தில் சிக்கிக் கொண்டது. சிட்னி நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவிலுள்ள சிறு நகரமான ஓல்ட்-பாரில், நடைபெற்ற வருடாந்த இரண்டுநாள் கொண்டாட்ட மைதானத்தில், குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட ராட்டினம் அது. விபத்தின்போது அதில் சிக்கிக் கொண்ட குழந்தைகள் 9, 13 வயதானவர்கள்.
இந்த மைதானத்துக்கு அருகாமையிலுள்ள விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இலகு விமானத்தை செலுத்திய விமானி, 53 வயதான பால் காக்ஸ். விமானம் புறப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் காலநிலை மிக மோசமான நிலையில் இருந்திருக்கிறது.
விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் விபத்து நடைபெற்றிருக்கின்றது. அதுதான், விமானத்தால் போதியளவு உயரத்தை அடைய முடிந்திருக்கவில்லை.
“காக்பிட்டில் இருந்து பார்த்தபோது, வெளியே ராட்டினம் இருப்பது எனது கண்களில் தென்படவே இல்லை. அவ்வளவு மோசமாக இருந்தது காலநிலை. திடீரென விமானம் எதிலோ மோதுவதை உணர்ந்தேன். மறுநிமிடமே, விமானம் ராட்டினம் ஒன்றின் இரும்புப் பகுதியில் சிக்கிக் கொண்டதை புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார் விமானி.
சீரான காலநிலை இல்லாத காரணத்தால்தான், நேற்றைய தினம், ராட்டினத்தில் அதிகளவு குழந்தைகள் ஏறியிருக்கவில்லை. அதற்கு முதல்நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களில், குறிப்பிட்ட ராட்டினத்தில் அதிகபட்ச எண்ணிக்கை அளவில் குழந்தைகள் சவாரி செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment