பல மாதங்களுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.
நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளர் ரவிதேவன்.
படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்’ என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்.
படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்துள்ளனர்.
துப்பாக்கி டைட்டில் டிஸைனும் கிட்டத்தட்ட ‘கள்ளத்துப்பாக்கி’ பாணியில் உள்ளது. மே முதல் நாள் அன்று துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி போஸ்டர்கள் கோடம்பாக்கம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. அதுவும் இரண்டும் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பைக் கிளப்பியது.
இன்னொரு பக்கம் தங்கள் பட போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அதற்கு மேலேயே விஜய் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக குற்றச்சாட்டியிருந்தனர் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.
விஜய்யின் துப்பாக்கி தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்களாம் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும். இவர்கள் புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.
ஆனால் சங்கம் இப்போது உடைந்துள்ள நிலையில், இப்ராகிம் ராவுத்தரிடம் போய் முறையிட்டுள்ளார்களாம்.
இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் நம்மிடம் கூறுகையில், “விஜய்யின் துப்பாக்கி படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எங்கள் கள்ளத்துப்பாக்கி படத்துக்கு பிரச்சினை வந்துவிட்டது.
மே 1-ம் தேதி எங்கள் படத்தின் போஸ்டர்களை ஒட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை ஒட்டவிடாமல் சதி நடந்திருக்கிறது. நாங்கள் போஸ்டர் ஒட்டவிருந்த இடத்தில், அதே தேதியில் ‘துப்பாக்கி’ போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
எனவே அடுத்த நாள் நாங்கள் போஸ்டர் ஒட்டினோம். உடனே, அன்று இரவே மீண்டும் போஸ்டர் அடித்து எங்கள் கள்ளத்துப்பாக்கி போஸ்டர் மீது ஒட்டி எங்கள் படத்தை மறைத்துவிட்டனர்.
ஆரம்பத்தில் நாங்கள் விஜய் படத்தை எங்களுக்கு எதிராக நினைக்கவில்லை. ஆனால் இப்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கிறோம். துப்பாக்கி என்ற தலைப்பை அவர்கள் பயன்படுத்துவதற்காக, எங்கள் படத்துக்கு எந்த அளவுக்கு போயும் பிரச்சினை செய்வார்கள் என நாங்கள் பயப்படுகிறோம். எனவே விஜய் படத்துக்கு துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது,” என்றார்.
இந்தப் பிரச்சினை இப்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு போயுள்ளது.











0 comments:
Post a Comment