Friday, April 6, 2012

கொட்டாஞ்சேனையில் முதியவர் ஒருவரை தாக்கி ஒரு மில்லியன் ரூபா வழிப்பறி: கொள்ளையர் தப்பியோட்டம்


கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று பிற்பகல் வங்கியொன்றிலிருந்து பத்து இலட்சம் ரூபா பணத்துடன் வந்த ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய குழுவொன்று அவரிடமிருந்த பணத்தை அபகரித்துச் சென்றுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே பிற்பகல் 3 மணியளவில் இந்தத் துணிகர வழிப்பறிச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொட்டாஞ்சேனை சந்திக்கு சமீபமாகவுள்ள தனியார் வங்கியொன்றில் பத்து இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு பிக்கறிங்ஸ் வீதியிலுள்ள தனது வீட்டிற்கு குறித்த நபர் நடந்து சென்றுள்ளார்.
இவர் முத்துமாரியம்மன் கோவிலைத் தாண்டி பிக்கறிங்ஸ் வீதிச் சந்திக்கு சென்ற போது, மிக வேகமாக வந்து இவரது அருகில் நின்ற வெள்ளை நிற சிறிய ரக வானிலிருந்து கீழே குதித்த இருவர் குறித்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.
அதன்பின்னர் குறித்த நபரிடமிருந்து பணப்பையை அபகரித்துக் கொண்டு வானில் வந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அப்பகுதியில் பலர் நின்றிருந்த போதும் அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மாரிமுத்துப்பிள்ளை சிதம்பரம் (60 வயது) எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment