Saturday, March 31, 2012

ஈ.பி.டி.பி உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ். இளைஞர்கள் நால்வர் கைது


திருகோணமாலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 18ஆம் திகதி குச்சவெளிப் பகுதியில், ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முச்சக்கர வண்டிக்குள் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் இவரது சடலத்தின் அருகில் விடுதலைப்புலிகள் என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றும் காணப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவரின் மரணம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை யாழில் வைத்து இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இறந்தவரின் தொலைபேசியிலுள்ள இலக்கத்தை வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் நேரடியாக குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், மற்றுமொருவர் படுகொலை செய்யப்பட்ட நபருடன் ஒரேயொரு தடவை மது அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, மேலும் சிலரை புலனாய்வுத்துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment