Saturday, March 31, 2012

இலங்கையில் சிகரெட், மதுபான வகைகள் மற்றும் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு!


இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் கார், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுபானம் மற்றும் சிகரெட்களின் விலைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு முதல் நாட்டின் கார் இறக்குமதி தொடர்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை, போக்குவரத்து நெரிசல், எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு ஆகிய விடயங்களை கருத்திற் கொண்டு அவற்றுக்கான செலவுகளை குறைக்கும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் உழவு இயந்திரம், பஸ், லொறி மற்றும் ட்ரக் ரக வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மதுபானம் மற்றும் சிகரெட்களின் விலைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் மூன்று பில்லியன் ரூபா வரி வருமானம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு லீற்றர் பியருக்கான தீர்வை வரி 50 ரூபாவாலும் ஒரு லீற்றர் உள்நாட்டு பியருக்கான வரி 5 ரூபாவாலும் மதுசார வகைகளுக்கான வரி 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அனைத்து வகை சிகரெட்களின் விலையை ஒரு ரூபாவால் அதிகரிக்கும் வகையில் அவற்றுக்கான வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment