யாழ் பிராந்திய வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதால் சிறந்த சேவையை வழங்க முடியாது இருப்பாக, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 110 வைத்தியர்களின் தேவை இருந்த போதும், 60 பேர் மட்டும் தற்போது சேவையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 28 வைத்திய நிபுணர்கள் தேவையாக உள்ளபோது 6 பேர் மட்டும் கடமையாற்றுகின்றன. அதே வேளை தாதிய உத்தியோகத்தர்களின் ஆளணியும் பெரும் பற்றாக்குறையாகக் இருப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆளணிப் பற்றாக்குறை காரணமாக யாழ். மக்களுக்குரிய சுகாதார சேவைகளை சிறந்த முறையில் வழங்க முடியாமல் இருப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் காது பரிசோதிக்கும் ஆய்வு கூடம்
கொழும்பு விக்கிரம ஆராட்சி நிறுவனத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு காது பரிசோதிக்கும் ஆய்வுகூடம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வாய்வு கூடத்தில் காது கேட்கும் திறனை அறிந்து கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ் ஆய்வு கூடத்தை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மற்றும் விக்கிரம ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்திய கலாநிதிகள் இணைந்து திறந்து வைத்தனர்.
கொழும்பு ஆசிறி வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் யாஸ் அபயவர்த்தன, ஜே.எம்.விக்கிரம ஆராச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி ஆகியோர் இணைந்து கேட்கும் திறன் குறைந்த, சிறுவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளை பார்வையிட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கிமை குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா வைத்தியசாலையின் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற செய்தி தவறானது - யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்
யாழ். போதனா வைத்தியசாலையின் மின்சார நிலுவைக்கட்டணம் செலுத்தாத காரணத்தினால், மின் இணைப்புத் துண்டிப்பு என்ற செய்தி முற்றிலும் தவறானது என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
31 மில்லியன் ரூபா யாழ்.போதனா வைத்தியசாலையின் மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பேசப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளருடனும் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5 மில்லியன் ரூபா பணத்தை சுகாதார அமைச்சிலிருந்து பெற்று செலுத்தியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். மிகுதிப் பணம் திறைசேரியிலிருந்து கிடைப்பதிலேயே தாமதமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.












0 comments:
Post a Comment