Friday, May 4, 2012

மூத்த ஆதினத்தை போதைக்கு அடிமையாக்கி பதவியைப் பெற்றாரா நித்தியானந்தா?...


தர்மபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் ஆட்கொணர்வு மனுவும், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் பொதுநல மனுவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹரி பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.


மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரனிகள் பீற்றர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர்.
அவர்கள் வாதிடுகையில், ''மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர் என்றனர்.
தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என மூத்த ஆதீனம் தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள கையெழுத்து அவருடையது தானா என்பதில் சந்தேகம் உள்ளது.
நித்யானந்தா மீது பாலியல், வரி ஏய்ப்பு வழக்குகள் உள்ளன. மதுரை ஆதீன நிர்வாகத்தை அரசு எடுக்கவும், ஆதீனத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்றனர்.
இந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு சட்டத்தரனி முகமது மைதீன் வாதிடுகையில், ஆதீனம் பிரச்சினைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
மேலும், இந்து அறநிலையத் துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை என்றார்.
மதுரை ஆதீனம் மற்றும் நித்யானந்தா சார்பில் ஆஜரான சட்டத்தரனி வீர.கதிரவன், இளைய ஆதீனத்தை நியமிக்க மூத்த ஆதீனத்துக்கு அதிகாரம் உண்டு. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
மனுதாரர்கள் விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment