Thursday, April 5, 2012

நாக மனிதர்கள்! அல்லோலகல்லோலப்பட்ட மக்களும் அம்பிகையின் திருவருளும்!! (ஒலிப்பதிவு)


pic_temநயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாயில் இருந்து நாகரத்தினக் கல் ஒன்றை எடுத்து அறங்காவலர் சபைத் தலைவரிடம் கொடுத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது.
நாகவரலாற்றை மையமாகக் கொண்ட இவ் ஊரில் இடம்பெற்ற ஆய்வுகளில் சீனச்சாடிகளும் வேறு சில பொருட்களும் கிடைத்திருந்தன. இவை மட்டும்தான் இத் தீவின் வரலாறு அல்ல.
இவற்றுக்கும் மேலாக பல வரலாறுகளாகக் கூறி உள்ள மேற்படி இளைஞன் நயினை அம்மன் ஆலயத்தை வாசுகி எனும் பாம்பு தாங்கியுள்ளது எனவும் அதன் கீழ்ப் பகுதி நாகலோகம் எனவும் 7 தலையுடைய வாசுகி எனும் பாம்பு இந்த புவனேஸ்வரி பீடத்தில் இருப்பதாகவும் விஷ்ணுவின் மகன் சங்குபாலனுக்கும் வாசுகிக்கும் திருமணம் இங்குதான் நடந்ததாகவும் மணமாகிய பின் இங்குதான் அவர்கள் குடி கொண்டதாகவும் இன்னும் வெளிவராத வரலாறுகள் வெளிவரவுள்ளதாகவும் கூறி நாகரத்தினக் கல்லை வாயிலிருந்து எடுத்து கொடுத்ததாக அறியப்படுகின்றது.
அத்துடன் இக் கல்லினை 9 வருடங்களுக்கு திறந்து பார்க்கக் கூடாது எனவும் அது பாம்பின் உத்தரவு எனவும் பார்த்தால் கண் குருடாகும் என்றும் அது நாட்டுக்கும் நல்லதல்ல எனவும் அருள்வாக்குக் கூறியதாகவும் அறியப்படுகின்றது. பாம்பு இளைஞனின் இந்த வாக்குறுதிகள் நிறைவு பெறும் காலத்தில் நயினாதீவின் பிரசித்தி மேலும் மகத்துவம் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் தான் மீண்டும் வரும் போது இத் தீவின் வரலாற்றை மேலும் வெளிப்படுத்தவுள்ளதாகவும் அதிசயங்கள் நிகழ்த்தவுள்ளதாகவும் கூறியமையும், இதனால் அவரின் அடுத்த வரவு பக்தர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.
திராவிட கலாசாரத்தில் நாக இன மக்களின் பூர்வீகத் தாயகமாகவும் ஆதியில் வணிகன் கடல் வழிவர நாகம் சர்ப்பத்தைத் தடுத்த கருடனின் கதைகளும் அதனோடிணைந்த ஆலய வளர்ச்சியும் இந்திரனால் அமைக்கப்பெற்று வழிபடப் பெற்றதாகக் கூறப்படுவதும் மணிபல்லவத்திலிருந்து நாடு நோக்கிச் சென்ற சோழ அரசன் நெடுநெற்கிள்ளியும் அவன் மனைவி நாககன்னி பீலிவளையியும் இந்தியாவின் தொண்டை மண்டலத்தருகே கப்பல் கடல் கொள்ள அவர் தம் பாலகன் கரையொதுங்கி தொண்டைமான் இளந்திரையனாக பல்லவர் சாம்ராஜ்ஜியத்தை சுமார் 4 நூற்றாண்டு காலத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதும் தென்னிந்திய ஆய்வாளர்களின் கருத்துக்களும் சாக்கிய மா முனிவர், கௌதம புத்தர் இம் மண்ணுக்கு எழுந்தருளி சூளோதரன், மகோதரன் ஆகியோருக்கு அருள் உரை வழங்கிய கதைகளும் ஆபுத்திரன் அமுதசுரபி கூறும் மணிமேகலை போன்ற காப்பியக் கதைகளும் கர்ண பரம்பரைக் கதைகளும் இன்றும் நின்றுலாவுகின்றன.
ஆதியில் நாகத்தீவு எனவும் நாகதுவீபம் எனவும் மணிபல்லவம் மணிநாகதீபம் எனவும் பின்பு நயினார்பட்டர் வருகையின் பின்னர் நயினாதீவு எனவும் அழைக்கப்பட்டும் பலகோடி இறையாத்திரிகர்களின் புனித இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு மகத்துவம் மிக்க சக்திவாய்ந்த பிரதேசமாகவும் பழம்பெரும் தொன்மையும் மகிமையும் புதுமையும் நிறைந்த ஆதியும் அந்தமும் இல்லா மூல விக்கிரகமும் அதனோடிணைந்த அருள் சக்தியும் எல்லையேற நிற்கும் இறையருளும் வழிபடும் எல்லோர்க்கும் மனநிறைவைத் தந்து கண்ணீர் கசிந்துருக வைக்கும் அருளாசி வழங்கும் ஆலயம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் எனலாம்.
மத அனுட்டானங்களும் மதம் சார் விடயங்களும் ஆராய்ச்சிக்கும் விமர்சனத்துக்கும் உரியவை அல்ல. கண்மூடித்தனமாக பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகள் மதத்திற்கும் மக்களுக்கும் அழிவையும் தீமையினையும் உண்டாக்குபவை.
மேமேல சொல்லப்பட்டது போன்று மர்மங்கள் நிறைந்த மட்டக்களப்பு சாமியாடிகளின் விநோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் ஒரு வித கிலேசத்தையும் உண்டுபண்ணுவதாக அமைந்தபோதும் இவர்களை நயினாதீவுக்குக் கொண்டு வந்தோர் கல்விப் புலமிக்க இந்துத்துறை சார்ந்த சான்றோர்களாக இருந்தமையும் இவ்விடயங்கள் தொடர்பில் ஒரு மயக்க நிலையினை உண்டு பண்ணுகிறது.
அதன் வகையே இரண்டாவது முறை நயினாதீவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த குறிப்பிட்ட இளைஞனும் வாசுகி என்றழைக்கப்படும் மனிதப் பெண்ணாகமும் பிற மனித நாகங்களும் நடந்து கொண்ட விதங்கள் அவர்களின் தெளிவான நிலையினை உண்டுபண்ணக் கூடியதாக அமைந்திருக்கவில்லை எனலாம்.
முதல்முறை வந்தபோது சொல்லப்பட்ட அதிசயங்கள் எவையும் இடம்பெறாமையும் வந்த பிற்பாடு ஆலயச் சூழலில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் சூட்சுமமான முறையில் அறிந்து கொண்டமையும் பின்பு அவற்றை தெய்வ வாக்குக் கூறுவதுபோல் கூறியமையும் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கைகளை சிதறடிப்பனவாக அமைந்தன.
தான் அம்பாளின் பிரதிநிதியாகவும் தன்னை வழிபாடு செய்ய வேண்டும் என்பதும் தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கருத்தே அவரின் பிரதான இலக்காக இருந்தமையும் குழுமியிருந்த மக்களில் நம்பாத மக்களை நரபலி கொடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டமையும், சம்பந்தம் அற்ற வகையில் மதுபான ஒழிப்புச் சம்பந்தமாக விபரணப்படுத்தப்பட்டதும் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கப்பட்டோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டமையும் பயமுறுத்தப்பட்டமையும் குழுமியிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கவில்லை.
இதேவேளை மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக ஆலய பொதுக் கூட்டத்தில் வழிபடுவோர் உறுப்பினர்களால் விளக்கங்கள் கோரப்பட்டிருந்தன. அதன் வகையில் ஆலய நிர்வாக சபைக்கு இவ் விடயங்கள் பெரிதாக தெரியவில்லை என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குறித்த கல்விப்புலம் மிக்கச் சான்றோர் தான் அறிந்தவரையில் தனக்கும் எதுவும் பெரிதாகத் தெரியாது எனவும் இது விடயம் தொடர்பாக குறித்த ஒரு மாத காலப் பகுதியில் அனைத்துக்குமான உண்மையான விடைகள் கிடைக்கலாம் யாவும் அம்பாளின் சித்தமே என்று உரைத்திருந்தார். அவை இரண்டாவது முறை வந்தபோது இளைஞன் மற்றும் அவரோடு இணைந்து வந்த ஏனையோரின் நடவடிக்கைகள் நம்பத்தகுந்த முறையில் அமையாமையும் கல்விச் சான்றோரின் கருத்தினை சரியானதாக தெளிவானதாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன எனலாம்.
மதம் சார் நம்பிக்கைகளைச் சிதைப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல. நாத்தீகம் வேறு ஆத்தீகம் வேறு. இரண்டுக்குமிடையில் மனிதன் பௌத்தறிவின் மூலம் அறியும் அறிவே அதாவது பக்குவப்பட்ட அறிவே ஞானம் எனப்படும். அவ்வாறு பெறப்பட்ட ஞான நிலையை அவன் அடைய வேண்டும் என்பதே ஆழமான மனித சிருஷ்டியின் இரகசியமாகும். சித்துக்கள் மூலம் தெய்வ நம்பிக்கைகளை வரவழைப்பது ஒரு மதத்தின் அவல நிலையினை எடுத்துக் காட்டுகின்றது.
சித்தின் மூலம் மதத்தையும் மக்களையும் சீரழித்தோர் ஏராளம் அறிந்துள்ளோம். அறிகின்றோம். பக்குவப்படாத இளம் சமூக சித்துடையோரின் நடவடிக்கைகள் விகற்பமாகவே முடியும். அதற்கு இரண்டாம் முறை வந்தோரின் நிலை சாட்சி. நாகங்கள் அதிகளவான பிரசன்னம் தற்போது நயினையில் அதிகம்தான்.
அவை வீடுதோறும் அனுப்பி வைக்கப்படும் எனப் பயமுறுத்தப்படுவதன் மூலம் நம்பாதோரை நரபலி கொடுக்கப்படும் என்பது மூலமும் ஏலவே சூட்சுமமான முறையில் அறிந்தவற்றை தெய்வ சித்து வந்ததுபோல் காட்டி தம்மை அடையாளப்படுத்துகின்றமை எதிர்கால விளம்பர நோக்கமுடைய ஒரு உத்தியாக வந்தோரினால் கைக்கொள்ளப்படுகின்றதும் மிகத் தெளிவாகப் புலனாகின்றது.
எனவே ஆராய்ச்சிக்கும் எட்டாத அன்னையின் சந்நிதியில் காலமும் கருவறை மூர்த்தமும் அனைத்துக்கும் பதில் சொல்லும் அதற்கான நம்பிக்கையான வேண்டுதலும் பிரார்த்தனைகளும் அவள்தம் பாதக் கமலங்களுக்குச் சமர்ப்பணம்.

0 comments:

Post a Comment