இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபது-20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இருபது-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் கடந்த 22 ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீரரான திலகரட்ண டில்சான் சதம் கடந்து 101 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் அடுத்து களமிறங்கிய குமாரா சங்கக்காரா 111 ஓட்டங்களும், அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன 55 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
இலங்கை அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் ஜயவர்த்தன 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சயித் அஜ்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய பிரசன்ன ஜயவர்த்தன மட்டுமே 48 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்களான சமரவீரா 6 ஓட்டங்களும், சுராஜ் ரந்திவ் 8 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்பு களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ், நுவான் குலசேகரா, ரங்கன ஹேரத், நுவான் பிரதீப் என்று அனைவரும் பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்சின் முடிவில் இலங்கை அணி 153.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 472 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால் சங்கக்கார தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்கள் எடுத்து இரட்டை சதத்தை ஓரு ஓட்டத்தில் தவறவிட்டார்.
பாகிஸ்தான் சார்பில் சயித் அஜ்மல் 5 விக்கெட்டும், மொகமது ஹபிஸ் 3 விக்கெட்டும், அப்துர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான மொகமது ஹபிஸ் 20 ஓட்டங்களும், தவ்பீக் உமர் 9 ஓட்டங்களும் எடுத்து இருவரும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அசார் அலி, சயித் அஜ்மல், ஆசாத் ஷாபிக் என்று மூவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. யூனிஸ் கான் 29 ஓட்டங்களும், மொகமது அயுப் 25 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி 54.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பில் சுராஜ் ரந்திவ் 4 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளையும், நுவான் குலசேகரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல், 372 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு 510 ஓட்டங்களை வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
முதல் இன்னிங்சில் சதமடித்த டில்ஷன் இரண்டாவது இன்னிங்சில் அரை சதமடித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 510 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பாகிஸ்தான் அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தை தொடங்கிய சில ஓவர்களிலேயே சயித் அஜ்மல் 12 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய யூனிஸ் கான் 87 ஓட்டங்களுடனும், ஆசாத் ஷாபிக் 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 300 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment