Tuesday, June 12, 2012

நெருப்பில்லாமல் புகையாது-சிறைக்கு செல்ல நான் தயார்: அன்னா ஹசாரே ...


அன்னா ஹசாரேஅன்னா ஹசாரே குழுவினர் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது கூறியிருந்த ஊழல் புகார்களைத் தொடர்ந்து, பதிலுக்கு ஹசாரே குழுவினரை தேச விரோதிகள் என மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.   
இந்நிலையில், ஹசாரே தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே என் குழு உறுப்பினர்கள் மீது அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களை தேச விரோதிகளாகப் பார்ப்பது துரதிருஷ்டவசமானது. ஹசாரே குழுவின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். அது எந்த வெளிநாட்டு சக்தி, அது எந்த நாடு? என்பதை அவர்கள் கூறவில்லை. இப்படிப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது சரியல்ல.
என்னைத் தேசத்துரோகி என்று அழைப்பது தவறானது. நான் ஒரு சதிகாரன் என்று அரசு கூறுகிறது. அது உண்மை என்றால் என்னைச் சிறையில் அடையுங்கள். ஒரு சாமானிய மனிதன் குற்றச்சாட்டுகளைக் கூறுவது என்பது வேறு. ஆனால் பிரதமர் அலுவலகம் இவ்வாறு குற்றச்சாட்டுகளைக் கூறுவது மிகவும் தீவிரமானது.
எங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு இருக்கிறது என்றால் உங்களிடம் இருக்கும் உளவுப் பிரிவை வைத்து அதை நீங்கள் ஏன் கண்டுபிடிக்கக் கூடாது? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமரோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ பணம் வாங்கியதாக நான் நம்பவில்லை.
எனினும் நெருப்பில்லாமல் புகையாது என்பதும் உண்மை. அந்தப் புகையைப் பிரதமர் பார்க்கவில்லையா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் பயனடைந்துள்ளதாகவும் மத்திய தணிக்கை அமைப்பு அறிக்கை கூறியுள்ளது. இதில் பயனடைந்தது யார்? என ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.


   

0 comments:

Post a Comment