Saturday, June 2, 2012

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைகையில் டீசலின் விலை உயர்வு...

மக்கள் நிதியினை அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான முறையில் கொள்ளையடிக்கின்றது. இதற்கு எதிராக நீதி மன்ற நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் உட்பட பதவி விலகியுள்ள அனைத்து பணியாளர் சபை உறுப்பினர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கடந்த 6 வருட காலமாக பாராளுமன்ற பொது கணக்காய்வு சபைக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் விபரங்கள் சமர்ப்பிக்கப்படாமை சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே ஐயலத் ஜயவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், டீசல் விலையினை இரண்டு ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் இந்தியன் ஒயில் கம்பனிக்கு அனுமதியளித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைகையில் உள்நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கிய அரசை எவ்வாறு பாராட்டுவது என்றே தெரியவில்லை. அதேபோன்று மில்கோ நிறுவனம் மிகவும் இரகசியமான முறையில் 400 கிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவிலிருந்து 310 ரூபாவாகவும் ஒரு கிலோ பால்மாவை 600 ரூபாவிலிருந்து 750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஏனைய பால்மாவின் விலைகளை அதிகரிக்க அரசே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பொது மக்களை பாதுகாப்பதற்காக செயற்படாது மோசடி காரர்களையே அரசு வளர்த்து வருகின்றது. பொது மக்களின் நிதியினை பயன்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அவரது அரசிற்கோ உரிமையில்லை. இன்று தேசிய நிதிகளுக்கு பாதுகாப்பளிக்க முடியவில்லை எனக் கூறினார்.

0 comments:

Post a Comment